திருநெல்வேலி மாவட்டத்தில் காதலித்த பெண்ணை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளாததால் பூச்சிமருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த கந்தையா என்பவருக்கு கணேசன் என்ற 24 வயதுடைய மகன் இருந்தார். கணேசன் பல்லடம் கரைப்புதூர் பகுதியில் சாயப்பட்டறை ஒன்றில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவரது ஊரில் உள்ள உறவுக்காரப் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் ஏற்கனவே இவரது அண்ணனுக்கு அப்பெண்ணின் அக்காவை மணம் முடித்ததால் ஒரே குடும்பத்திலிருந்து பெண் எடுக்க வேண்டாம் என்று பெற்றோர்கள் கூறினர். இருப்பினும் கணேசன் அந்தப் பெண்ணையே தொடர்ந்து காதலித்து வந்துள்ளார். இருவரும் செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். கடந்த 26ஆம் தேதி கணேசனிடம் அவரது பெற்றோர்கள் அந்தப் பெண் வேண்டாம் என்று தொலைபேசி மூலமாக மிகவும் கடுமையாக திட்டி உள்ளனர்.
அதனால் மனமுடைந்த கணேசன் அவரது அறையிலேயே பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து விட்டார். இதனைப் பார்த்த அவருடன் பணிபுரியும் சக தொழிலாளர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கணேசனின் தந்தை பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.