பிரித்தானியர்கள் புதிய பாஸ்போர்ட் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக புகார்கள் எழுந்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து புதிய பாஸ்போர்ட் கோரி பெரும்பாலான விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. அதை பரிசீலிக்க 10 வாரங்கள் வரை ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த பிரித்தானியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். இந்நிலையில் கூடுதல் தகவலாக மற்றொரு பிரச்சனையும் சேர்ந்து கொண்டுள்ளது. என்னவென்றால் பாஸ்போர்ட்கள் அதிகாரிகளால் முத்திரையிடப்பட்டுவிட்டாலும் அவை விண்ணப்பித்தவரை வந்தடைய வழக்கமான நேரத்தை விட தாமதமாகிறது. இதற்கிடையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் TNT கூரியர் நிறுவனம் பெரும்பாலான பாஸ்போர்ட்களை பட்டுவாடா செய்ய வேண்டியுள்ளதால் அவை விண்ணப்பித்தவர்களை சென்றடைய அதிக கால தாமதம் ஆகிறது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறைக்காக வெளிநாடு செல்வதற்காக டிக்கெட்டுகளை பதிவு செய்துவிட்டு தங்கள் பாஸ்போர்ட் வருவதற்காக காத்திருக்கும் சிலர், அதை தேடி கூரியர் அலுவலகங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனையடுத்து TNT கூரியர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தால் நீண்ட நேரத்துக்கு யாரும் அழைப்பை ஏற்பது இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதனால் வெறுப்படைந்த சில பிரித்தானியர்கள் இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தக்கோரி புகார் மனு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த மனுவில் பிரித்தானியர்கள் கூறியிருப்பதாவது “கடந்த சில மாதங்களாக எங்கள் பாஸ்போர்ட்கள் டெலிவரி செய்யப்படுவதில் கடுமையான தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பலர் தங்கள் வெளிநாட்டு பயண திட்டத்தை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கில் பவுண்டுகள் நட்டமும் ஏற்பட்டு உள்ளது. மேலும் மற்ற கூரியர் நிறுவனங்களைப் போன்று TNT டெலிவரி செய்யும் பொருட்களை ட்ராக் செய்வதற்கான சரியான வசதிகளும் இல்லை. அதிலும் சிலரது ஆவணங்களை TNT தவறவிட்டும் உள்ளது. எனவே இந்த பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் தாமதத்திற்காக TNT நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி சரியான நேரத்தில் பாஸ்போர்ட்களை டெலிவரி செய்ய கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுடிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.