ஓடை கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தகரகுப்பம் ஊராட்சியில் 10 கிராமங்கள் அமைந்திருக்கிறது. இந்த கிராமங்களில் வசிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் கொடைக்கல், லாலாபேட்டை, ரெண்டாடி ஆகிய கிராமங்களுக்கும், கல்லூரி மாணவ-மாணவிகள் வாலாஜா உள்பட 4 நகரங்களுக்கும் சென்று படித்து வருகின்றனர்.
இந்நிலையில் லாலாபேட்டை பகுதியில் இருக்கும் சிப்காட் தொழிற்சாலைக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். இதில் ஊராட்சியில் இருந்து ஒரு நாளைக்கு 200-யிலிருந்து 300 நபர்கள் வரை சென்று வருகின்றனர். இதற்காக அவர்கள் தகரகுப்பம் பேருந்து நிறுத்தத்திற்கு செல்கின்றனர். இதனையடுத்து பேருந்து நிறுத்தத்திற்கு செல்லும் வழியில் 3 இடங்களில் ஓடையில் இறங்கி தான் செல்ல வேண்டும்.
பின்னர் மழை காலங்களில் ஓடையில் அதிகமாக தண்ணீர் ஓடுகின்ற காரணத்தால் கிராமங்களில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு வரும் மக்கள் வர முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனை தொடர்ந்து ஓடை கால்வாயில் புதிதாக 3 சிறு தரைபாலம் வேண்டும் எனவும், ஓடையில் உள்ள பழைய தரைபாலத்தை அகற்றி விட்டு புதிதாக தரைப்பாலம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.