கால்வாயில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தட்சிணாமூர்த்திக்கு 12 வயதில் சந்தோஷ் என்ற மகன் உள்ளான். சந்தோஷ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று மாலை சந்தோஷ் தனது நண்பர்களுடன் கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றுள்ளான். கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போது சந்தோஷ் எதிர்பாராத விதமாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டான்.
இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் நீரில் குதித்து கால்வாயில் இழுத்து செல்லப்பட்ட சந்தோஷை மீட்டனர். பின்னர் உடனடியாக சிகிச்சைக்காக சந்தோஷை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.