ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி திடீரென காணாமல் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான மாணிக்கம் என்பவர் குலசேகரப்பட்டினத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற போது அந்த சிறுமியிடம் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து மாணிக்கம் அந்த சிறுமியிடம் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் மாணிக்கம் கடத்தி சென்ற சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் மாணிக்கத்தை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.