நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் அனைத்தும் தலீபான்கள் கைவசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் காபூலில் இருந்து ஜேர்மனி நோக்கி அமெரிக்க மீட்பு விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தீடிரென பிரசவ வலி வந்துள்ளது.
உடனடியாக விமானி புத்திசாலித்தனமாக விமானத்தை சிறிது தூரம் தாழ்வாக பறக்க செய்து விமானத்திற்குள் காற்றழுத்தத்தை அதிகரிக்க செய்துள்ளார். இதனால் அந்த கர்ப்பிணி பெண் சீரான உடல் நிலையை அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மீட்பு விமானம் ஜேர்மனி அமெரிக்க விமான தளத்தை அடைந்ததும் தயாராக இருந்த மருத்துவர்கள் குழு விமானத்தில் வைத்தே கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். பின்னர் அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு தாயும் சேயும் நலமாக இருப்பதாக செய்தி தொடர்பாளர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பதற்றமும் உயிர் பயமும் நிறைந்த ஆப்கானிஸ்தான் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.