மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள நவப்பட்டி கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்தார். இவர் லாரி டிரைவராக இருந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கவின்குமார், சிவா ஆகிய 2 பேர் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் 3 பேரும் சேர்ந்து மேட்டூரிலிருந்து புதூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே மேட்டூரை சேர்ந்த சதாம் உசேன் பவானியில் இருந்து மேட்டூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கூனான்டிபுதூரில் வந்து கொண்டிருந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் ஆனந்தன், கவின்குமார் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
அதன்பின் சிவா மற்றும் காரை ஓட்டி வந்த சதாம் உசேன் இருவரும் படுகாயமடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து சிவா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தன், கவின்குமார் ஆகிய இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.