அரசால் தடைசெய்யப்பட்ட குட்காவை காரில் கடத்திய 2 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நெடுஞ்சாலை ரோந்து படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அசோகன், அர்த்தநாரி மற்றும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் காரில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் காரை தனியாக நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் தடைடெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
அதன்பின் காரி வந்த 2 பேரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் மைசூரு வாட்டர் சப்ளை நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், மைசூரு ராகவேந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் அருண் என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பெங்களூரில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தியது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்த், டிரைவர் அருண் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 3 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் அவர்கள் வந்த காரை காவல்துறையினர் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.