வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் படுகாயமடைந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கண்டிகைபேரி பகுதியின் கனிராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கற்பகவல்லி என்ற மகள் இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனிராஜின் மகளான கற்பகல்லியை வெங்காநல்லூர் கிராமத்தில் வசிக்கும் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவருக்கு மித்ரா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து கற்பகவல்லி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்து தனது குழந்தைக்கு வைத்துள்ள காதணி விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில் கனிராஜ் தனது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் வேனில் காதணி விழாவிற்கு சென்றுள்ளார்கள். இந்த வேனை ஜோதி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அதன் பிறகு கனிராஜ் மற்றும் உறவினர்களான செந்தூரப்பாண்டி, ஜோதி, மாரிதுரை, இன்பரசி, மீனாட்சி, மனோரஞ்சனி, கற்பக்கனி, சின்னத்துரை, வீரபுத்திரன், முனிசாமி, காசினி, கலைச்செல்வி, பாண்டிராஜ் ,வேல் மயில், நிஷா ஆகியோர் காதணி விழாவை முடித்துவிட்டு தனது ஊருக்கு திரும்பி வேனில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் பெரும்புதூர் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் இருந்த செந்தூரப்பாண்டி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதுமட்டுமில்லாமல் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தூரப்பாண்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.