மாடுகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதை வனத்துறையினர் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும்பாலானோர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவர்களது மாடுகள் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டில் மேய செல்வது வழக்கம் ஆகும். இதில் பல்வேறு மாடுகள் காட்டின் மையபகுதிக்கு சென்று விடுகிறது. இவ்வாறு செல்லும் மாடுகளை வீடுகளுக்கு அழைத்து வருவது கடினமாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான மாடுகள் காட்டிலேயே வசித்து வருகிறது. இத்தகைய மாடுகளை தேட முடியாமல் கால்நடை வளர்ப்போர் அதை காட்டிலேயே விட்டு விடுகின்றனர்.
இந்நிலையில் தற்போது அலையாத்திக்காட்டில் நூற்றுக்கணக்கான மாடுகள் வசித்து வருகின்றது. இதனையடுத்து காட்டின் மைய பகுதியில் இருந்து மாடுகள் வெளியே வரும் நேரத்தில் அவற்றை சிலர் இறைச்சிக்காக வேட்டையாடி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆகவே இதை வனத்துறை அதிகாரிகள் கவனித்து அலையாத்திக் காட்டுப்பகுதியில் வசித்து வரும் மாடுகளை பாதுகாக்கவும், அவற்றை வேட்டையாடுபவர்களை கண்டறியவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.