காற்றில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு அளவு அதிகரித்தால் covid-19 வைரஸின் வீரியம் அதிகரிக்கலாம் என அமெரிக்காவில் வெளியான ஆய்வுக்கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள 3 ஆயிரத்து 122 மாவட்டங்களில் காற்று மாசு காரணிகளை கண்காணித்து ஆய்வு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய காற்று மாசு காரணிகளான நைட்ரஜன் டை ஆக்ஸைடு, ஓசான் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. குறுகிய மற்றும் நீண்ட கால காற்று மாசுபாட்டினால் மனித உடலில் நேரடியாக பாதிப்பு ஏற்படுவதாக இக்கட்டுரை தெரிவித்துள்ளது.
ஆய்வின் முடிவில் கொரோனா பாதிப்பிற்கும் காற்று மாசிருக்கும் இடையேயான தொடர்பு இருப்பதாகவும், குறிப்பாக நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு அதிகமாக இருக்கும் பகுதியில் கொரோனா உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகவும் இக்கட்டுரை தெரிவித்துள்ளது. காற்றில் 4.6 பிபிபி அளவிற்கு நைட்ரஜன் அதிகமுள்ள பகுதிகளில் கொரோனா உயிரிழப்பு 11 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் இக்கட்டுரை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகம் உள்ள நியூயார்க், நியூஜெர்சி, காலிஃபோர்னியா மற்றும் அரிசோனா மாநிலங்களில் நீண்டகாலமாக நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு அதிகமாக உள்ளதால் சுகாதாரத்துறையினர் காற்று மாசு காரணியையும் கணக்கில் கொள்ள வேண்டும் என இந்த ஆய்வு கட்டுரை பரிந்துரைத்துள்ளது.