கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்து விட்டது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள குமரிகட்டி, கருப்பன் ரெட்டியப்பட்டி, கண்ணூத்து போன்ற பல்வேறு மலைபகுதிகளில் காட்டெருமைகள் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் முத்தலம்பட்டி பகுதிக்கு காட்டெருமை ஒன்று உணவு தேடி வந்துள்ளது. அப்போது அந்த காட்டெருமை 25 அடி ஆழமுள்ள தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை அடுத்து காட்டெருமை கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்த தோட்டத்தின் உரிமையாளர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால் இரவு நேரம் என்பதால் காட்டெருமையை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காட்டெருமைக்கு தேவையான உணவுப் பொருட்களை வனத்துறையினர் கிணற்றிற்குள் போட்டனர். ஆனாலும் அதிகாலை நேரத்தில் அந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் கிரேன் மூலம் காட்டெருமையின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்துள்ளனர். அதன்பிறகு கால்நடை மருத்துவர்கள் காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு வனத்துறையினர் அப்பகுதியில் அதனை புதைத்துவிட்டனர்.