காட்டு பன்றியை வேட்டையாடிய 4 வாலிபர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பங்களா பொட்டல் அருகில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் புளியங்குடி பகுதியில் வசிக்கும் முருகன், கணேஷ் குமார், ஈஸ்வரன், சுரேஷ் என்பதும் அவர்கள் 4 பேரும் கொய்யாப்பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடியதும் வனத்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
இது குறித்து மாவட்ட வன அலுவலர்கள் உத்தரவின் படி 4 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து காட்டு பன்றியையும் கைப்பற்றினர். மேலும் வனத்துறையினர் 4 பேருக்கும் தலா ரூபாய் ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் வசூலித்தனர்.