கனடாவில் விவசாயி ஒருவர் காட்டுபூனைக்கு அறிவுரை கூறியுள்ளார்.
கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் Chris Paulson என்ற விவசாயி தனது கோழிப் பண்ணையில் இருந்து கோழிகளை திருடிய காட்டுப்பூனையை பிடித்துள்ளார். பிறகு அவர் செய்த செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், அவர் காட்டுப்பூனையின் கழுத்தை பிடித்து தூக்கி “உன்னால் எனக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று பார்.
இனிமேல் நீ இங்கு வரவேக் கூடாது” என்று கூறியுள்ளார். பின்னர் தனது பண்ணையில் இருந்து தூரமாக உள்ள புதர்கள் உள்ள ஒரு இடத்தில் அந்த காட்டுப்பூனையை விட்டுள்ளார். மேலும் அது மிகவும் மெலிவுற்று இருந்ததால் அது கொன்ற இரண்டு கோழிகளையும் அதன் பக்கத்திலேயே உணவாக வைத்துவிட்டு வந்திருக்கிறார் Chris Paulson.
இது குறித்து அவர் கூறியதாவது, “நாம் இயற்கை சங்கிலியில் இணைந்து வாழ்க்கை நடத்தி வருகிறோம்.எனவே இரை கிடைக்கும் இடத்தில் அதனை உண்பதற்கு விலங்குகள் வரத்தான் செய்யும்” என்று கூறியுள்ளார். ஆனால் வனபாதுகாப்பு அலுவலரான Jeff Palm விவசாயி செய்தது தவறு என்று சுட்டிக் காட்டியுள்ளார். ஏனென்றால் காட்டுப் பூனைகள் நம்மை தாக்க கூடியவை.
அவற்றை கையில் பிடித்து தூக்கும்போது நம் கைகளை இழக்க கூடிய அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவர் செய்தது சட்டப்படி குற்றம் தான். காட்டுப்பூனையை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போய் விடுவது வனவிலங்கு கடத்தல் குற்றத்தில் அடங்கும். எனவே அதற்கு அபராதமும் உண்டு என்று கூறியுள்ளார்.