தலைமை செயலாளர் காவல் துறையினரை கண்டிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் ஜெயசந்திரன் மற்றும் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் கூட்டாக, தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியவும், பரவுவதை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
கொரோனோவை தடுப்பதற்கு சுகாதாரமான முறையில் இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவிற்கு தண்ணீர் விநியோகம் இல்லை என்றால் சுகாதாரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற காரணத்தினால் தண்ணீர் அதிகளவில் விநியோகம் செய்யப்பட வேண்டும். மேலும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் தங்களின் பணிகளை முடித்து வீடு திரும்பும் முன், குளிப்பதற்கும், உடை மாற்றி கொள்வதற்கும் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இவற்றின் மூலம் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படக்கூடிய சூழல் உருவாகாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற நிலையில், ரேஷன் அட்டை இல்லாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும், சிறைகளில் இருக்கும் கைதிகள் அனைவரையும் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கை மீறி வெளியில் சுற்றி திரிபவர்களின் வாகனங்களை சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல், கட்டுப்பாட்டுடன் செய்லபடுவதற்கு காவல் துறையினர் அனைவருக்கும் அறிவுறுத்த வேண்டும். இதனை அடுத்து வன்முறையில் ஈடுபடும் காவலர்களைக் கண்டிக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இது தொடர்பாக காவல் துறை, சிறைத் துறை, பொது விநியோகத் துறை, குடிநீர் வழங்கல் வாரியம் ஆகியவை 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.