கல்லூரி மாணவனை கைது செய்ததற்காக நண்பர்கள் ரயிலை மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திடீரென அண்ணனூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் ஏறிய ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் அங்கிருந்த கல்லூரி மாணவர்களில் ஒருவரது பையை சோதனை செய்துள்ளார். நடந்த சோதனையில் அந்தப் பையில் இருந்து சுமார் 10 முதல் 15 எண்ணிக்கையில் ரயில் தண்டவாளத்தில் உள்ள கற்கள் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆவடி ரயில் நிலையம் வந்தபோது அந்த மாணவரை மட்டும் கீழே இறக்கி ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட சக கல்லூரி மாணவர்கள் அந்த காவல்துறையினரின் செயலை கண்டித்துள்ளனர். மேலும் ஆவடி ரயில் நிலையத்தில் இறங்கி மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அறிந்த ஆவடி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானம் செய்து அந்த மாணவனையும் உடன் அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் மின்சார ரயில் தாமதமாக அரக்கோணம் சென்றுள்ளது.