சர்வதேச கபடி கூட்டமைப்பால் 2004ஆம் ஆண்டு முதல் உலகக்கோப்பை கபடி போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட மூன்று தொடர்களிலும் இந்திய அணியே சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. மூன்று முறையும் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, 2019 உலகக்கோப்பை கபடி போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை பஞ்சாப் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ராணா குர்மீத் சிங் சோதி வெளியிட்டார். இந்த உலகக்கோப்பை கபடி போட்டிகள் சீக்கிய மத குருவான குருநானக்கின் 550ஆவது பிறந்தநாளுக்கு அர்ப்பணிக்கும் விதமாக நடத்தப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
2019 உலகக்கோப்பை கபடி தொடரில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, கென்யா, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா ஆகிய அணிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாகிஸ்தான், கனடா ஆகிய அணிகள் இன்னும் இந்திய அரசிடமிருந்து தடையில்லா சான்றிதழ்கள் பெறவில்லை என அமைச்சர் கூறினார்.
உலகக்கோப்பை போட்டிகளின் தொடக்க விழா சுல்தான்பூர் லோதி நகரில் உள்ள குருநானக் மைதானத்தில் நடைபெறுகிறது. தொடரின் நிறைவு விழா தேரா பாபா நானக்கில் உள்ள ஷாகித் பகத் சிங் விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.