கபடி விளையாட்டில் காயமடைந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் சடைவீரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூக்கன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 12-ஆம் வகுப்பு படிக்கும் சங்கரேஸ்வரி என்ற மகள் உள்ளார். கடந்த 16-ஆம் தேதி நாசரேத் பகுதியில் பொங்கலை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில் மூக்கனும் கலந்துகொண்டு விளையாடியுள்ளார்.
அப்போது மூக்கனின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மூக்கன் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனையடுத்து மூக்கனுக்கு தொடர்ந்து வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அதன்பின் மூக்கனின் குடும்பத்தினர் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூக்கன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த நாசரேத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.