காபூல் இராணுவ மருத்துவமனையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் மிகப்பெரிய இராணுவ மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று 2 வெடிகுண்டுகள் தொடர்ந்து வெடித்ததோடு, அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடத்தப்பட்டது.மேலும், வெடிகுண்டை உடலில் மறைத்து வைத்து கொண்டுவந்த மர்ம நபர் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் அதனை வெடிக்க செய்தார்.
இந்த தாக்குதலில் 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால், காபூல் இராணுவ மருத்துவமனை போர்களம் போன்று காட்சியளிப்பதால் அப்பகுதியில் தலீபான் அமைப்பின் பாதுகாப்பு படையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். பின்னர், இந்த தாக்குதலை நடத்தியது யார்..? என்ற குழப்பம் நீடித்து வந்தது.
இந்த நிலையில், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஹரசன் பிரிவு, “காபூல் மருத்துவமனையில் நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம். எங்கள் அமைப்பை சேர்ந்த 5 பேர் தான் இந்த தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டை நடத்தினர்” என்றும் பொறுப்பேற்றுள்ளது. தற்போது, இந்த இரட்டை குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் உயிரிழந்த 25 பேரில் ஐ.எஸ் பயங்கரவாதிகளும் அடங்குவர்.