இரகசிய சிறப்பு படை ஒன்று குடிமக்களை மீட்பதற்காக காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை அன்று கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சென்றுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர். இந்த நிலையில் சுவிட்சர்லாந்து குடிமக்களையும் அவர்களை மீட்டெடுக்க சுவிஸ் குழுவுடன் இணைந்து உதவிபுரிந்த அந்நாட்டை சேர்ந்தவர்களையும் மீட்பதற்காக சுவிட்சர்லாந்து அரசு இரகசிய சிறப்பு படை ஒன்றை ஆப்கானிற்கு அனுப்பியுள்ளது.
இந்த AAD 10 என்றழைக்கப்படும் சுவிஸ் ரகசிய படையானது வெளிநாடு ஒன்றில் தங்கி உள்ளது. இதில் மொத்தம் 90 பேர் உள்ளனர். இவர்களின் முக்கிய பணி தூதரகங்களை பாதுகாப்பதே ஆகும். சான்றாக லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிராக போர் வெடித்த பொழுது சுவிட்சர்லாந்து தூதரகத்தை இவர்கள் பாதுகாத்துள்ளனர். தற்போதும் அதே மாதிரி இப்படையில் உள்ள 10 பேர் விடுபட்ட சுவிட்சர்லாந்து குடிமக்களையும், சுவிஸ் குழுவிற்கு உதவிய ஆப்கானியர்களையும் மீட்பதற்காக காபூல் சென்றுள்ளனர். இதனை சுவிட்சர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.