கடை வியாபாரியை கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் சீனிவாசன்-நளினா. சீனிவாசன் அப்பகுதியில் பழைய பேப்பர் கடை ஒன்றை நடத்தி வந்தார். இத்தம்பதியருக்கு ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி கடையிலிருந்து வீட்டிற்கு சென்ற சீனிவாசன் தலையில் அடிபட்ட நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து சீனிவாசன் தவறி விழுந்து உயிரிழந்ததாக கருதி அவரது குடும்பத்தினர் சீனிவாசனின் உடலை தகனம் செய்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த 55 பவுன் நகை காணாமல் போனது அவரது குடும்பத்திற்கு தெரிய வந்தது . இதுதொடர்பாக சீனிவாசனின் மனைவியும்,மகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் அடங்கிய குழுவினர் வழக்கை விசாரித்தனர். விசாரணையில் சீனிவாசனின் கடையில் பணிபுரிந்து வந்த மணியனூரைச் சேர்ந்த தமிழ்செல்வன் , வேடுகாத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ,மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருக்கு இந்த கொலையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
சம்பவத்தன்று மூன்று பேரும் வீட்டில் உள்ள நகைகளை திருடும் போது சீனிவாசன் வீட்டிற்கு உணவருந்த வந்துள்ளார். அப்போது திருட்டை தடுக்க முயன்ற சீனிவாசனை 3 பேரும் சேர்ந்து சுவரில் இடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 55 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.