பெண்ணை சாலையில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்ட காரணத்தினால் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள குப்பங்குளத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி இரவு நேரத்தில் கிருஷ்ணன் தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து வீராங்கன் என்பவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் 4 பேரை காவல் நிலையத்திற்கு அனுப்பி விட்டு கிருஷ்ணனை மட்டும் மற்ற கொலையாளிகள் இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டரின் கழுத்தை அறுத்து விட்டு தப்ப முயன்ற கிருஷ்ணனை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனையடுத்து அவரின் மனைவி காந்திமதி இரவு நேரத்தில் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அழுவாள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த காந்திமதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லுகின்ற வழியில் காந்திமதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வீராங்கனின் கூட்டாளிகள் யாரேனும் அவரை வெட்டி கொலை செய்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குப்பங்குளத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் 50-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.