பிரபலமான கடைக்குள் சென்று வாலிபர் ஒருவர் கத்தியால் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சாலையில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் இரவு நேரத்தில் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் பொருட்களை தேர்வு செய்து கொண்டிருக்கும் போது வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் கடைக்கு வந்துள்ளார். அதன்பின் வாய்க்கு வந்தபடி கெட்ட வார்த்தைகளைப் பேசி கடை ஊழியரிடம் கத்தியை காட்டியும், வாடிக்கையாளர்களை மிரட்டியும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் கடைக்கு வெளியே வந்த வாலிபர் அங்கு சாலையில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற தொழிலாளியாக பணிபுரியும் ரத்தினகுமார் என்பவரை வாலிபர் கத்தியால் வெட்டியுள்ளார். அதில் அவருக்கு தலையில் வெட்டு விழுந்து ரத்தம் நிற்காமல் வழிந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதனைப் பார்த்த பொதுமக்கள் வாலிபரின் செயலை கண்டு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வருவதற்குள் அதை அறிந்த வாலிபர் அங்கிருந்து தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். ஆனால் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.