சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சின்னியம்பாளையம் பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகல் எடுக்கும் பிரிவில் பணி செய்து வந்தார். கடந்த 9.3.2019 ஆம் ஆண்டு சுபாஷ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுபாஷுக்கு தாகம் எடுத்ததால் தண்ணீர் குடிப்பதற்காக அவர் சாலையோரத்தில் இருந்த வாத்துக்கறி கடைக்கு சென்றார். அப்போது அந்த கடையில் 6 வயதுடைய சிறுமி மட்டும் தனியாக இருந்தார். இதனையடுத்து சுபாஷ் அந்த சிறுமியிடம் தண்ணீர் கேட்டார். இதனால் சிறுமியும் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார்.
இந்நிலையில் சிறுமி மட்டும் கடையில் தனியாக இருந்ததை பார்த்த சுபாஷ் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் மிட்டுள்ளார். அந்த சத்தம் கடையின் பின்புறமாக இருந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். ஆனால் அதற்குள் சுபாஷ் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். அதற்குள் அனைவரும் சுற்றி வளைத்து சுபாஷை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். மாலதி தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சுபாஷுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த அபராத தொகையை சுபாஷ் செலுத்த தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி ஆர். மாலதி தீர்ப்பு வழங்கினார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக ஒரு மாத காலத்திற்குள் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார். இவ்வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார்.