தமிழகத்தில் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்தத் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளான தீக்குச்சி கேரள மாநிலத்திலிருந்து வாங்கப்படுகிறது. அங்கு உற்பத்தியாகும் மட்டி,அல்பிஸியா, ரப்பர், அஸ்பின், பாப்புலர் மற்றும் பாலை முருங்கை ஆகிய மரங்களிலிருந்து தீக்குச்சி தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படும்.
இந்நிலையில் தீப்பெட்டிக்கு தேவையான மெழுகு, அட்டை, குளோரைடு மற்றும் பாஸ்பரஸ் போன்ற மூலப் பொருட்களின் விலை அதிகமாகியுள்ளதால் தீப்பெட்டியின் விலையை அதிகரிக்கப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர் கூறியது, ஒரு கிலோ பாஸ்பரஸ் விலை ரூ.410 இருந்து ரூ.750 ஆகவும், மெழுகு ரூ.62 லிருந்து ரூ.85 ஆகவும், குளோரைடு ரூ.70 லிருந்து ரூ.82 ஆகவும் மற்றும் அட்டை ரூ.42 லிருந்து ரூ.55 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் டீசல் செலவு அதிகரித்துள்ளதால் போக்குவரத்துச் செலவும் அதிகரித்து உள்ளது. இதனால் வருகின்ற டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தீப்பெட்டியின் விலை ரூ.1 இருந்து ரூ.2 ஆக உயர்த்தப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. தீக்குச்சியில் உள்ள தேவையில் 85% மட்டி மரத்தை சேர்ந்துள்ளது.மேலும் தமிழக விவசாயிகள் பயன் பெறக்கூடிய வகையில் தீக்குச்சி மரங்களும் வன இலாகா மூலம் தமிழ்நாட்டில் விவசாயிகள் சாகுபடி செய்து பலன் பெறுவதற்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது