கடலில் சிக்கிய தனது மகனையும் அவனுடைய நண்பனையும் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள நார்போல் கடற்கரையில் நேற்று மாலை Danni(30) என்ற பெண் தனது மகன் மற்றும் அவனுடைய நண்பனுடன் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அவருடைய மகனும் அவனுடைய நண்பனும் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக இருவரும் தண்ணீரில் சிக்கியுள்ளனர். அதனைக் கண்ட Danni உடனடியாக சிறுவர்களை காப்பாற்றுவதற்காக கடலில் குதித்துள்ளார். அச்சமயத்தில் அருகிலிருந்த சிலர் கடலுக்குள் குதித்து சிறுவர்கள் இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர். ஆனால் சிறுவர்களைக் காப்பாற்றுவதற்காக கடலுக்குள் குதித்த அந்தப் பெண்ணை அவர்களால் காப்பாற்ற இயலவில்லை.
அதன் பிறகு உடனடியாக மீட்புக் குழுவினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் அந்த பெண்ணை கரைக்கு மீட்டு வந்து, முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்ட நிலையிலும், அவரை காப்பாற்ற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவத்தை கண்ட ஒருவர் கூறுகையில், “அந்தப் பெண்ணின் மகன் மிகுந்த பதற்றத்துடன் என்ன நடக்கிறது என்று தனக்கு புரியாமலேயே தாய்க்கு முதலுதவி சிகிச்சை செய்யப்படுவதை பார்த்துக்கொண்டிருந்தான். அதனை காண்பதற்கே மிகவும் வருத்தமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.