கடலில் விசைப்படகு மூழ்கியதால் தத்தளித்த 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் காஜாமைதீன், முகமது அபுபக்கர், என்ராஜ் மற்றும் அசாருதீன் ஆகிய நான்கு மீனவர்கள் அர்ஜுனன் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்க சென்றனர். இதனையடுத்து நால்வரும் மீன்பிடித்து கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் வந்த விசைப்படகில் சிறு துளை ஏற்பட்டதால் தண்ணீர் படகுக்குள் புகுந்தது.
இதனால் சிறிது நேரத்தில் கடலுக்குள் படகு மூழ்கியதால் அவர்கள் நால்வரும் கடலில் குதித்தனர். இதனைத் தொடர்ந்து நான்கு மீனவர்களும் தத்தளித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்ததும் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலில் தத்தளித்த 4 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் விசைப்படகு கடலில் மூழ்கியதால் படகில் இருந்த 1 லட்சம் மதிப்புள்ள மீன்கள் வீணானது.