விசைப்படகிலிருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கலம்பாடு பகுதியை சேர்ந்தவர் ஜெரின் ஜோஸ். இவர் நெல்லையில் உள்ள சட்ட கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.ஜெரின் ஜோஸும் குளச்சல் துறைமுக பகுதியை சேர்ந்த பினு என்பவரும் நண்பர்களாக இருந்தனர் . கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஜெரின் ஜோஸ் குளச்சலில் உள்ள பினுவின் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய பின்பு படகில் சவாரி செய்ய முடிவு செய்துள்ளனர்.பின்னர் குளச்சலில் இருந்து விசைப்படகில் முட்டத்திற்கு சென்றுள்ளனர். இவர்களுடன் விசைப்படகில் 40 பேர் பயணித்துள்ளனர்.
மணவாளக்குறிச்சி சின்னவிளை பகுதியில் விசைப்படகு சென்று கொண்டிருந்தபோது ஜெரின் ஜோஸ் படகிலிருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். இச்சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தகவலின் பேரில் கடலோர பாதுகாப்பு காவல் துறையினரும் மீனவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் ஜெரின் ஜோஸை மீட்க முடியவில்லை. நேற்று 2-வது நாளாக தேடியும் கிடைக்காததால் அவரது உறவினர்களும் நண்பர்களும் சோகத்தில் மூழ்கினர்.
இன்று காலை 3வது நாளாக மீனவர்களும் கடலோர பாதுகாப்பு காவல் துறையினரும் தேடி வந்த நிலையில் சின்னவிளை கடல் பகுதியில் காலை 6 மணியளவில் ஜெரின் ஜோஸ் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து கடலோர காவல் துறையினரும் மீனவர்களும் ஜெரின் ஜோஸ் உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். ஜெரின் ஜோசின் உடலை பார்த்து அவரது உறவினர்களும் நண்பர்களும் கதறி அழுதனர். பின்னர் ஜெரின் ஜோசின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.