வெங்காய மூட்டைகளுக்கு இடையில் மது பாட்டில்களை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயசங்கர், டெல்டா பகுதியை சேர்ந்த சப் – இன்ஸ்பெக்டரான நடராஜன் மற்றும் போலீசார் வேப்பூர் கூட்டுரோடு சந்திக்கும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து அந்த லாரியில் பயணித்த மூன்று நபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுஉச்சிமேடு பகுதியில் வசிக்கும் லாரி டிரைவர் ஆன மணிகண்டன், உதயகுமார், துரை என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் லாரியில் சோதனை செய்தபோது அதில் இருந்த வெங்காயம் மூட்டைகளுக்கு இடையே 18 பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். அதன்பின் மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக மணிகண்டன் உட்பட மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி போன்றவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.