மோட்டார் சைக்கிளில் சென்ற போது கடப்பாரை உடலில் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உப்புத்துறை பாளையம் பகுதியில் தன்னாசியப்பன் என்பவர் வருகிறார். இவருக்கு வீரமலை என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி தேவிகா என்ற மனைவி உள்ளார். இவர் தேங்காய் உரிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொங்கூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வீரமலை தேங்காய் உரிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வேலை முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் கடப்பாரையை கட்டிக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கயிறு அறுந்து கடப்பாரை மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் வீரமலை கீழே விழுந்துள்ளார்.
அப்போது கூர்மையாக இருந்த கடப்பாரை வீரமலையின் உடலில் பாய்ந்தது. இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் வலியால் சத்தம் போட்ட வீரமலையை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு வீரமலைக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன்பின் மேல் சிகிச்சைக்காக வீரமலையை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வீரமலை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.