கோவிலில் கடவுளை வணங்கும் முறையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. அறிந்து கொண்டு கடவுளின் முழு அருளையும் பெறுங்கள்..
மன அமைதிக்காக பெரும்பாலானோர் அவரவர் மதத்திற்கு ஏற்ற கோயில்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது இந்து கோயில்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னவென்று தெரியுமா..?
கோயிலுக்கு செல்லும்போது உடல், ஆடை, மனம் ஆகியவை தூய்மையாக இருக்கவேண்டும். நெற்றியில் ஆண்கள் திருநீறும், சந்தனமும், பெண்கள் குங்குமம் இல்லாமல் வழிபடக்கூடாது.
கோயில் வாயிலில் நுழையும் முன் தண்ணீரால் கை, கால்களை கழுவிக்கொண்டு செல்ல வேண்டும். கோயிலுக்குள் சென்ற பிறகு யாரிடமும் பேசாமல், இறைவனை மட்டும் மனதில் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
கோயிலுக்கு சென்றவுடன் முதலில் கோபுரத்தை தரிசிக்க வேண்டும். இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி வணங்க வேண்டும். அதன்பிறகு கொடி மரத்தின் வலது பக்கத்தில் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.
பிறகு பலிபீடத்துக்கு அருகில் சென்று நம்மிடமுள்ள தீய குணங்களை பலி கொடுத்ததாக வணங்க வேண்டும். அதன்பிறகு விநாயகரை வணங்க வேண்டும். விநாயகரை வணங்கும்போது தோப்புக்கரணம் போட வேண்டும்.
அப்போது நெற்றி பொட்டுகளில் லேசாக குட்டிக்கொள்ள வேண்டும். கோயிலுக்குள் சுற்றும்போது வேகமாக நடக்காமல் மெதுவாக நடக்க வேண்டும். மும்முறை சுற்றி வந்ததும் கருவறை மண்டபத்துக்குள் நுழைந்து இறைவனை தரிசிக்க வேண்டும்.
அர்ச்சனைகள் செய்து ஆரத்தி காட்டியதும் தீபத்தை பயபக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். பின்பு கோயிலுக்கு வெளியில் அனுமாரை தரிசித்து கோயிலுக்குள் பிரவேசிக்க வேண்டும்.
பிறகு சிறிது நேரம் கோயிலில் உட்கார்ந்து கண்மூடி பகவானை நினைத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் மானசீகமாக தரிசித்துவிட்டு உத்தரவு பெற்றுக் கொண்டு கிளம்ப வேண்டும்.
பிரகார வலம் எப்போதும் இடமிருந்து வலமாக வரவேண்டும். விநாயகர், சிவன், முருகன் கோயில்களில் ஒருமுறை வலம் வரலாம். சிவன், முருகன் கோயில்களில் 3முறை வலம் வரவேண்டும்.
அம்மன் கோவிலில் நான்கு முறையும், நவக்கிரங்களை 9 முறையும், பெருமாள் கோயிலில் 4 முறையும், வலம் வர வேண்டும். அப்போது நந்தி, மயில் போன்ற வாகனங்களையும் சேர்த்தே வலம் வரவேண்டும். மூலவருக்கும்வாகனங்களுக்கும் குறுக்கே ஒரு போதும் வரக்கூடாது.
அதனால்தான் ஆலயங்களில் மூலவரை வழிபடும் இடத்தில் இரண்டு பக்கங்களில் இரு பிரிவாக இருந்து வழிபடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவாலயங்களில் சிவனை வழிபடுவதற்கு முன்பு நந்தி தேவரை வழிபட்டு ‘நந்தியே சிவபெருமானை வழிபட எனக்கு அனுமதி கொடு’ என்று வேண்டியபின்னரே சிவனை வழிபட வேண்டும்.
விழுந்து வணங்குதல் நான் எவ்வளவு அதிகாரம் படைத்தவனாக இருந்தாலும், எவ்வளவு செல்வந்தனாக இருந்தாலும், எவ்வளவு படித்திருந்தாலும், எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், பெரிய மனிதனாக இருந்தாலும் இறைவனுக்கு முன்பு அவை ஒரு பொருட்டல்ல, எல்லாம் நீ தந்ததுதான் என்று இறைவனிடம் சரணடைவதுதான் இதன் பொருள்.
ஆண்கள் அஷ்டாங்கப் பணிவு என்ற முறையிலும், பெண்கள் பஞ்சாங்கப்பணிவு என்ற முறையிலும் விழுந்து வணங்க வேண்டும். அஷ்டாங்கம் என்பது எட்டு அங்கங்களைக் குறிக்கும். அவை தலை, இரண்டு செவிகள், இரண்டு கைகள், இரண்டு கால்கள், முகம் என்பனவாகும்.
இந்த எட்டு அவயங்களும் தரையில் படுமாறு பணிந்து வணங்குதல் அஷ்டாங்கப்பணிவு ஆகும். ஆண்கள் இப்படித்தான் விழுந்து வணங்க வேண்டும். பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களைக் குறிக்கும். அவை தலை, இருமுன் கைகள், இரு முழங்கால்கள் ஆகும். இந்த ஐந்து அங்கங்களும் தரையில் படுமாறு பெண்கள் பணிந்து வணங்க வேண்டும்.
கோவில் கொடி மரத்தின் முன்பு மட்டுமே விழுந்து வணங்க வேண்டும். வேறெங்கும் வணங்க கூடாது. அவ்வாறு வணங்கும் போது மேற்கு அல்லது தெற்கு திசையில் மட்டுமே கால் நீட்ட வேண்டும். சூரிய கிரகணம் சங்கராந்தி தினங்களில் வழிபடும் போது மட்டும் மேற்கு திசையில் கால் நீட்டக்கூடாது, வடக்கு அல்லது தெற்கு நோக்கிய சன்னதிகளில் விழுந்து வணங்குதல் அவசியமில்லை.
கரங்குவித்து வணங்குதலே போதும். தரையில் விழுந்து வணங்கும் போது உடம்பில் எவ்வளவு தூசி படிகிறதோ அவ்வளவு அதிகமான காலம் நாம் கயிலையில் வாழும் பாக்கியம் கிடைக்கும், என்று வேதம் கூறுகிறது.