காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத்(24).இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார் . மஞ்சுநாத்தும் மங்களூர் பகுதியை சேர்ந்த சோனியா(22) என்ற பெண்ணும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பாகலூரில் வசிக்கும் தனது தாத்தாவின் வீட்டிற்கு சோனியா சென்றுள்ளார். அப்போது இவர்களது காதல் இருவீட்டாருக்கும் தெரிய வந்ததால் இருவரது பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து மஞ்சுநாத் சோனியாவிடம் செல்போனில் தனது ஆதங்கத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று காலை சோனியா தனது தாத்தாவின் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சோனியா இறந்த செய்தியை கேட்ட மஞ்சுநாத் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.