காதல் திருமணம் செய்த புது தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மீனாம்பாறை பாலக்கரை தோட்டம் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோவையில் உள்ள கல்லூரியில் டி-பார்ம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரணும், அவரது தூரத்து உறவினரான பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்த கந்தர்வகோட்டை பகுதியில் வசிக்கும் வீரமுத்துவின் மகள் வினிதா என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த 1 1\2 மாதங்களுக்கு முன்பு கந்தர்வகோட்டைக்கு சரண் சென்றுள்ளார். அப்போது பெற்றோருக்கு தெரியாமல் சரண், வினிதாவை அழைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
அதன்பின் இருவரும் திருப்பூரில் உள்ள காங்கேயம் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் வினிதாவின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் வினிதா சரணுடன் திருப்பூரில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. இதனையறிந்த சரணின் பெற்றோர் இருவரையும் தங்களது வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் சரணின் தாயார் மற்றும் அவருடைய அக்காள் இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
இதனால் சரணும், வினிதாவும் வீட்டில் தனியாக இருந்தனர். இந்நிலையில் சரணின் தாயார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதனால் தாயார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சரண் மற்றும் வினிதா ஆகிய இருவரும் தனித்தனியே தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின் சரணின் தாயார் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு சரண் மற்றும் வினிதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வீரபாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பெற்றோர் தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.