Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்களை சேர்த்து வச்சிருங்க…. மனைவியின் பெற்றோருக்கு நடந்த சம்பவம்…. வேலூரில் பரபரப்பு….!!

காதல் மனைவியை பிரித்து வைத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் மனைவியின் பெற்றோர் மற்றும் சகோதரியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேதாஜி சவுக் பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களின் 2 மகள்களுக்கு திருமணமாகி குடியாத்தம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதில் மூன்றாவது மகளான மோனிஷா என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குடியாத்தம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை கடை வைத்திருக்கிறார். இவருக்கு முகேஷ் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக முகேஷும் சந்திரசேகரின் மூன்றாவது மகளான மோனிஷாவும் காதலித்து வந்தனர். இதனையறிந்த சந்திரசேகர் தனது வீட்டை அதே பகுதியில் உள்ள மற்றொரு தெருவிற்கு மாற்றிவிட்டார். கடந்த ஜனவரி மாதம் முகேஷ், மோனிஷாவை அழைத்துக்கொண்டு ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதனையறிந்த மோனிஷாவின் பெற்றோர் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு முகேஷ் மோனிஷாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து சந்திரசேகர் தனது மகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு அம்மாவிற்கு உடம்பு சரியில்லை என கூறியதால் மோனிஷா மீண்டும் அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதுகுறித்து முகேஷ் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னை தனது மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் மகளிர் காவல்துறையினர் இருவரையும் அழைத்து எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என அறிவுரை கூறி பெற்றோரிடம் மோனிஷாவை அனுப்பி வைத்தனர். இதனால் முகேஷ் மனவருத்தத்துடன் அங்கிருந்து சென்றார். இந்நிலையில்  விரக்தியுடன் இருந்த முகேஷ் மோனிஷா வீட்டிற்கு கத்தியுடன் புறப்பட்டார். இதனையடுத்து முகேஷ் மோனிஷா வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்ததால் சந்திரசேகர் கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் சந்திரசேகரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனை தடுக்க வந்த அவரது மனைவி சசிகலாவையும், அவர்களது இரண்டாவது மகளான கௌரியையும் கத்தியால் குத்தியுள்ளார். இதனையடுத்து அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ளவர்கள் ஓடி வந்ததால் தப்ப முயன்ற முகேஷ் வீட்டின் மாடியின் மேல் ஏறி குதித்த போது மின் கம்பியில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகிலுள்ளவர்கள் சந்திரசேகர், அவரது மனைவி சசிகலா, கர்ப்பிணியான கௌரி மற்றும் முகேஷ் ஆகியோரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி சசிகலாவை சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த முகேஷையும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குடியாத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த இருதரப்பினரும் மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |