மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் காதலுக்கு உதவி கேட்டதற்கு கமிஷனர் சொன்ன பதில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் காவல்துறை ஆணையராக அமிதாப் குப்தா என்பவர் பணியாற்றி வருகிறார். மக்களிடம் சமுதாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர்களின் குறைகளை கேட்டு அவ்வப்போது அதற்கான பதிலையும் ட்விட்டர் நேரலை மூலம் அளித்து வந்துள்ளார் .இதனைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு தலைக்கவசம் பயன்பாடு பொதுமக்களிடம் காவல்துறையின் அணுகுமுறை அவை தொடர்பாக பொதுமக்கள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் அளித்து தீர்வை வழங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் இளைஞர் ஒருவன் அவருடன் லைவில் வந்து தான் காதலிக்கும் பெண்ணிடம் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு கூறி உதவி செய்யுமாறு காவல்துறை ஆணையர் அமிதாப் குப்தாவிடம் கேட்டு கொண்டான். இவ்வாறு இளைஞன் சற்றும் எதிர்பாராத கேள்வியை கேட்டவுடன் காவல்துறை ஆணையர் சிறு புன்னகையுடன் பெண்களின் விருப்பம் இல்லாமல் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்றும் கடந்த வருடம் வெளிவந்த நடிகர் அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்தின் பாணியில் “நோ மீன்ஸ் நோ “என்று கூறி அந்த இளைஞனுக்கு புத்திமதி வழங்கினார்.
தமிழில் வெளியாகி நேர்கொண்ட பார்வை படம் ஹிந்தியில் அமிதாப்பச்சனின் நடிப்பில் வெளியான “பிங்க் ” படத்தை தழுவி உருவாக்கப்பட்டதாகும். மேலும் காவல் ஆணையர் அந்த இளைஞரிடம் “துரதிர்ஷ்டவசமாக” அந்தப் பெண்ணின் ஒத்துழைப்பு இல்லாமல் எங்களால் எந்த உதவி செய்ய முடியாது. மாறாக நீங்களும் அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக எதுவும் செய்யக்கூடாது. ஒருநாள் அப்பெண்ணை உங்களின் காதலை புரிந்துகொண்டு ஏற்றுக் கொள்வாள். அதுவரை காத்திருக்க வேண்டும் .
மேலும் அவ்வாறு நடக்கும் பொழுது எங்களின் ஆசீர்வாதமும் வாழ்த்தும் உங்களுக்கு உண்டு. அதுவரை நோ மீன்ஸ் நோ என்ற பதிலை காவல் ஆணையர் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகி உள்ளது