காகித ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் மறுசுழற்சிக்காக பழைய காகித பண்டல்கள் ஏற்றி தனியார் காகித ஆலைக்கு லாரி ஒன்று வந்தது. இந்நிலையில் லாரியின் டீசல் டேங்க் எதிர்பாராதவிதமாக வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் தனியார் காகித ஆலையில் மறுசுழற்சிக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த காகித பண்டல்களில் தீ வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் காகித பண்டல்கள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் கூடுதலாக தாராபுரம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் தீயணைப்பு துறையினர் தண்ணீர் லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காகித ஆலையில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான காகித பண்டல்கள் எரிந்து நாசமானது.