விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கைத்தறி சேலைகளை கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்வதில் தாமதபடுத்துவதால் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சேலைகள் தேக்கம் அடைந்ததாக நெசவாளர்கள் கூலியின்றி தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் ஏழு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் இப்பகுதியிலுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நூல் மற்றும் மூலப்பொருட்களை இந்த சங்கங்களில் இருந்து பெற்று சேலைகள் நெசவு செய்து வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் சேலைகளே கூட்டுறவு சங்கங்களில் கொடுத்து கூலி பெற்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சேலைகளுக்கான மூலப் பொருட்கள் கூட்டுறவுச் சங்கங்கள் தாமதமாக வழங்கியதால் சில நாட்கள் வேலையின்றி இருந்துள்ளனர்.
தாமதமாக கிடைக்கும் மூலப்பொருட்களை பெற்ற நெசவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சேலைகளை நெசவு செய்து வைத்தனர். ஒட்டுமொத்தமாக நெசவாளர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனை கொள்முதல் செய்ய கூட்டுறவு சங்கங்கள் முன்வராமல் காலதாமதம் செய்வதால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் கூலியின்றி வறுமையில் வாடுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நெசவாளர்களிடம் இருந்து சேலைகளை கொள்முதல் செய்து கூலி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.