ஓடும் பேருந்தில் குற்றவாளிகள் 4 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நாகாச்சி பகுதியில் வசிக்கும் கார்த்திக், மணிமாறன், திருஞானம் மற்றும் தினேஷ் ஆகிய 4 பேரும் மதுரை மாவட்டத்தின் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் 4 பேரையும் இம்மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்த சிறைச்சாலையிலிருந்து காவல்துறையினர் பேருந்தில் அழைத்து வந்துள்ளனர். அப்போது காவல்துறையினரிடம் தங்களது குடும்பத்தாரிடம் பேசுவதற்காக மொபைல் போனை கேட்டுள்ளனர்.
ஆனால் காவல்துறையினர் அவர்களிடம் மொபைல் போனை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்கள் 4 பேரும் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை கை விலங்கால் அடித்து உடைத்து கீழே சிதறிய துண்டுகளை எடுத்து கையை அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கையில் இருந்த கண்ணாடி துண்டுகளை காவல்துறையினர் பறிக்க முயற்சி செய்த போது அவர்களை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது.
இருப்பினும் காவல்துறையினர் அவர்களிடம் சாதுவாக பேசி கண்ணாடி துண்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் 4 கைதிகளையும் காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். மேலும் அவர்கள் 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் மதுரைக்கு அழைத்து சென்றுள்ளனர்.