ஆறு மாதங்களுக்கு முன்பு விழுங்கப்பட்ட செல்போனை கைதியின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
தெற்கு எகிப்தில் உள்ள சிறையில் கைதி ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பு செல்போனை விளங்கியுள்ளார். இதனால் அந்த கைதியின் உடலில் உணவு செரிமானம் செய்வதை செல்போன் தடுத்துள்ளது. மேலும் அவரின் வயிறு மற்றும் குடல் வீக்கம் அடைந்துள்ளது. உடனடியாக போலீஸ் அதிகாரிகள் அவரை அஸ்வான் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை சோதனை செய்தபோது வயிற்றில் செல்போன் இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதன்பின் அவரது உயிரை காப்பாற்றுவதற்காக உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு செல்போனை அவருடைய வயிற்றிலிருந்து அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் “இந்த கைதி அடிக்கடி செல்போனை விழுங்கி பின்னர் மலம் கழிக்கும்போது அதனை வெளியில் எடுப்பார். ஆனால் இந்த முறை அவரால் அதை எடுக்க முடியவில்லை. ஏனென்றால் அவர் அந்த செல்போனை பிளாஸ்டிக் பையில் போட்டு விழுங்கி இருக்கிறார். இதனால் அவருடைய செரிமானம் பாதிக்கப்பட்டு உடல் ஆரோக்கியம் மிகவும் மோசமடைந்துள்ளது” என்று கூறியுள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அவர் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட செல்போனை மருத்துவ குழுவினர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.