கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள முத்துசேர்வாமடம் பெரிய தெருவில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலில் ராமசாமி என்பவர் பூசாரியாக இருந்து வருகின்றார். இவர் வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் மதியம் 2 மணி அளவில் ராமசாமி கோவிளுக்கு சென்று பார்த்தபோது வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்து பணத்தை மர்ம நபர்கள் திருடி போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
எனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் கிராம முக்கியஸ்தர்கள் கோவில் உண்டியலை திறந்து பார்க்கவில்லை. இதனால் கோவில் உண்டியலில் 1 லட்சம் ரூபாய் இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோன்று கடந்த 2018-ஆம் ஆண்டு இதே கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.