காளகஸ்தி சிவன் கோவில் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அர்ச்சகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடுமையாக கடைபிடிக்கப் பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடப்பட்டன. இதையடுத்து தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், கோவில்கள்,வணிகவளாகங்கள், மால்கள் உள்ளிட்டவற்றை திறக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்படி, வணிக வளாகங்கள் அனைத்தும் இந்தியாவின் பல பகுதிகளில் திறக்கப்பட்ட நிலையில், கோவில்களுக்கு மட்டும் ஒரு சில மாநிலங்கள் முடிவு செய்யப்பட்ட தேதியில் படிப்படியாக திறந்து வந்தன. அந்த வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவில், கேரளாவில் உள்ள சபரிமலை என பிரத்யேக கோயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் மிகவும் பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் இன்று திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட முதல் நாளிலேயே அங்கு பணிபுரியும் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட, அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கோவில்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.