கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என திருநங்கைகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் கலை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இதனால் கலைத்துறையில் உள்ள கலைஞர்களின் குடும்பத்தினர் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் இருக்கும் தமிழ் கலை பண்பாட்டு மையத்தில் திருநங்கைகள் கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வை பாடலாக பாடியும், அதற்கு நடனம் ஆடியும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கையில் பல்வேறு நடன, இசைக்கலைஞர்கள் தனது வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் இருந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அனுமதி வழங்க வேண்டும் எனவும், திருநங்கை கலைஞர்களுக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருநங்கைகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.