நாகை மாவட்டத்தில் ஆடி அமாவாசை நாளில் கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .
நாகப்பட்டினம் மாவட்த்தில் வேதாரண்யம் ,கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதியில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறந்த முதியோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி பிறகு வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்குச் சென்று சுவாமியை வழிபடுவார்கள். ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆடி அமாவாசை நாளில் கடலில் பொதுமக்கள் நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அத்துடன் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியும் ,சோதனை சாவடிகளை அமைத்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து வேதாரண்ய பகுதியான தாணி கொட்டகம், தாமரைபுலம், சங்கத்தலை பாலம் ஆகிய இடங்களில் பக்தர்கள் குளிக்க வேண்டாம் என்று விளம்பர பலகை வைக்கப்பட்டது . இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த ஆடி அமாவாசை தினத்தையொட்டி வெளியூரிலிருந்து பக்தர்கள் வேதாரண்யத்திற்கு வந்து இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு கடலில் புனித நீராடி விட்டு செல்வார்கள் .ஆனால் இந்த ஆண்டு வெளியூர் பக்தர்களும் வராததால் வேதாரண்யம் கடற்கரை பகுதிகள் ,நகர வீதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.