விசாரணைக்கு ஆஜராக வந்த சமயத்தில் கலவரத்தை தூண்டியதால் நவாஸ் ஷெரீப் மகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் (46), தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் துணைத்தலைவராக இருந்து வருகிறார். அவர் சட்ட விரோதமான முறையில் நிலம் கைப்பற்றியதாக புகார் எழுந்ததுள்ளது. அது பற்றி அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு லாகூரில் லஞ்ச ஊழல் தடுப்பு படையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர் சென்ற 11-ஆம் தேதி அங்கு ஆஜராக வந்திருந்தார். ஆனால் அவருடன் ஏராளமான கட்சித்தொண்டர்களும் வந்துள்ளனர். அப்போது கட்சித்தொண்டர்களுக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதுள்ளது.
காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை கட்சித்தொண்டர்கள் மீது வீசியதால் ஆத்திரமடைந்த அவர்கள் கற்களை வீசி போலீசாரை தாக்கியுள்ளனர். அதில் பலர் படுகாயம் அடைந்ததால் 50 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் தனக்கு தீங்கு உண்டாக்க அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக மரியம் நவாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் மரியம் நவாஸ் மற்றும் அவரது கட்சி தொண்டர்கள் மீது கலவரத்தை தூண்டியதாக சுங் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து லாகூர் லஞ்ச ஒழிப்பு காவல் படை அலுவலகம் கூறுகையில், “ மரியம் நவாசை தனிப்பட்ட முறையில் விசாரணை செய்யவே அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் அவர் அவ்வாறு விசாரணைக்கு ஆஜராகாமல் அவருடைய கணவர் சப்தார் தூண்டுதலின்படி, பாகிஸ்தான் முஸ்லீம்லீக் கட்சி தொண்டர்களை கலவரம் செய்வதற்கு தூண்டியுள்ளார். அதனால் மரியம் நவாஸ், அவரது கணவர் சப்தார், அவரது கட்சித்தலைவர்கள் ரானா சனவுல்லா, மிர்சா ஜாவத், ஜாவத் லத்தீப், மியான் அப்துல் ராப் மற்றும் 184 பேர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம்” என கூறியுள்ளது.