கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டை, உடைசலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது தமிழக மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளதாக தேமுதிக தலைவர்குற்றம் சாட்டியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல அரசு பேருந்துகள் தரமற்றதாக இருப்பதாக குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ” தமிழகத்தில் இயக்கப்படும் 30 சதவீத பேருந்துகள் காலாவதியாகிவிட்டன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் முன்னதாகவே தேமுதிக சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டை, உடைசலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது தமிழக மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது. பல புறநகர் பகுதிகளில் பெரும்பாலான காலாவதியான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். பேருந்தின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்த நிலையில் மழை காலங்களில் மக்கள் நனைந்தவாறே பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இது மட்டுமின்றி மேற்கூரை எப்போது விழும் என்ற அச்சத்திலேயே பயணிகள் பயணம் செய்கின்றனர். இதனால் எந்த அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பே தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசு பேருந்துகளை மாற்றி மக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்.
இதற்கிடையில் தமிழக அரசு பேருந்துகளில் பெண் பயணிகளுக்கு இலவசம், ஐந்து வயது வரை உள்ள சிறுவர்களுக்கு கட்டணம் இல்லை போன்ற அரசின் பல்வேறு அறிவிப்புகளை வரவேற்கிறேன். இதே சமயத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு பேருந்துகளை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தரமற்ற பேருந்துகளை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்ப பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.