கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஈடுபடுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊராட்சி அளவில் கமிட்டி உருவாக்கி அதில் ஊராட்சி மன்ற தலைவர், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழு பிரதிநிதிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவின் மூலமாக வெளியில் செல்பவர்கள் மற்றும் வெளியூரிலிருந்து வருபவர்களில் பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்காணித்து அவர்களை பரிசோதனை செய்து, பின் பரிசோதனை முடிவு வரும் வரை அவர்களைத் தனிமை படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்.
பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இதைப் போல் இம்மாவட்டம் முழுவதும் கடைப்பிடிக்கும் போது நிச்சயமாக தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆதலால் இதை ஊராட்சி பிரதிநிதிகள் குழு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் கூறியுள்ளார். மேலும் 100% கொரோனா தடுப்பூசி போட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.