கலெக்டர் தலைமையில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்ற நிலையில் சிறப்பாக சமையல் செய்த நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவின் ஒரு பகுதியான பாரம்பரிய உணவு திருவிழா நிகழ்ச்சி இம்மாவட்டத்தின் பேருந்து நிலையம் அருகாமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றி மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் இவ்விழாவில் சுமார் 120 பாரம்பரிய உணவு வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் சமையலறையில் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவை இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 120 பாரம்பரிய உணவு வகைகளின் செய்முறை விளக்கம் மற்றும் அவற்றில் அடங்கிய ஊட்டச்சத்துக்களின் பயன்களும் கண்காட்சியில் விளக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஊட்டச்சத்து உணவு தயாரித்தல் போட்டியில் சிறப்பாக உணவுகளை தயார் செய்த நபர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கி பாராட்டியுள்ளார்.