மூதாட்டியை கட்டிப்போட்டு பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில் புதூர் சவாரி கவுண்டர் தோட்டத்தில் மூதாட்டி துளசியம்மாள் வசித்து வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்து த்து வீட்டில் தனியாக வசித்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மகன் சோமனசுந்தரம் டானா புதூரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு வேளையில் துளசியம்மாள் கழிப்பறை செல்வதற்காக வீட்டிற்கு வெளியில் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் துளசியம்மாளின் வாயை பொத்தி அவரை கழிப்பறைக்குள் தூக்கிச் சென்றனர்.
இதனையடுத்து துளசியம்மாள் அணிந்திருந்த சேலையை கிழித்து அவரின் கை, கால்களை மர்மநபர்கள் கட்டியுள்ளனர். அதன்பின் துளசியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி, வளையல், கம்மல் என 5 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டனர். மேலும் துளசியம்மாளிடம் பீரோல் சாவி எங்கே இருக்கிறது என்று மர்ம நபர்கள் கேட்டு மிரட்டினர். இதனைத்தொடர்ந்து துளசியம்மாள் சாவி இருக்கும் இடத்தை கூறியவுடன் பீரோவில் இருந்த 15 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
அதன்பின் கழிப்பறையில் இருந்து தவழ்ந்து வந்த துளசியம்மாள் காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து துளசியம்மாளின் கை, கால் கட்டுகளை அவிழ்த்து விட்டனர். இதனை அறிந்த மோகனசுந்தரம் புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.