குடிநீர் குழாயில் அசுத்த நீர் தேங்கியதால் அதை சீரமைக்க பக்தர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் பகுதியில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த கோவிலில் முடி காணிக்கை செலுத்துதல், பால்குடம் எடுத்தல், உயிர் கோழி விடுதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செய்து வருகின்றனர். இதனையடுத்து பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய பின் அந்த கோவிலில் உள்ள குடிநீர் குழாயில் குளித்து வருகின்றனர்.
மேலும் இந்த குடிநீர் குழாயை கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் பயன்படுத்தி வருகின்றனர்.எனவே இந்த குடிநீர் குழாய் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. ஆனால் இந்த குடிநீர் குழாய் தாழ்வான பகுதியில் இருப்பதால் மழைநீரும், அசுத்த நீரும் தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பக்தர்கள் குடிநீர் குழாயில் அசுத்தநீர் தேங்காமல் இருக்க சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.