கால்வாய் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கப் பணி கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது சாலையோரம் இருக்கின்ற கட்டிடங்கள், வீடுகள், மரங்கள் அவற்றை அகற்றி சாலை விரிவாக்கம் மற்றும் சாலையின் இருபக்கமும் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதனை அடுத்து மேல்பட்டாம்பாக்கம் பகுதி சாலையோரத்தில் ஒரு சில பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பின்னர் ஊழியர்கள் ஏற்கனவே கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்ட இடத்தை விட்டு விட்டு சற்று தள்ளி புதிதாக பொக்லைன் எந்திரம் மூலமாக பள்ளம் தோண்டி உள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென கால்வாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதோடு, ஊழியர்களிடம் ஏற்கனவே வெட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்க்கு நேராக பள்ளம் தோண்டி, அந்த இடத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களிடம் அதிகாரிகள் ஏற்கனவே பள்ளம் தோண்டிய இடத்திலேயே கால்வாய் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். மேலும் இதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.